Wednesday, 9 July 2025

நூறாவது அகவையில் தடம் பதிக்கின்றார் மலேசியாவைச் செதுக்கிய சிற்பி


படம் 1: பிறந்த நாள் வாழ்த்து

    2025-ஆம் ஆண்டு 10-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் 100 வயதை எட்டிய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை நாட்டின் நவீனமயத் தந்தையாகத் திகழும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் தன் வசமாக்கியுள்ளார். மகாதீரின் நூற்றாண்டு என்பது மலேசியாவின் நூற்றாண்டும் கூட.

    இன்று துன் மகாதீரின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. மலேசியாவின் நவீன வளர்ச்சிப் பாதைகளுக்கு வழித்தடம் அமைத்து கொடுத்து ஒரு நூற்றாண்டு தேசிய வரலாற்றை உருவாக்கிய தலைவரை நினைவுக் கூர்ந்து பார்க்கும் நாளாகும்.

    1925-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி, கெடா அலோர் ஸ்டாரிலுள்ள கம்போங் செபெராங் பேராக்கில் முஹம்மத் இஸ்கண்டார் - வான் தெம்பாவான் வான் ஹனாப்பி தம்பதிக்கு இளைய மகனாகப் பிறந்த துன் டாக்டர் மகாதீர் காலணித்துவ ஆட்சி முதல் நவினமயமாக்கல் மாற்றங்களைக் கடந்து பயணிக்கும் நாட்டின் மூத்த தலைவராவார்.

    மலேசிய வரலாற்றில் இரு முறை பிரதமர் பதவியில் அமர்ந்து நாட்டின் நலனுக்காகப் பல முக்கிய முடிவுகளை எடுத்து, சில தருணங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

  இன்று மலேசியா பல துறைகளில் மேம்பட்டு தனக்கென ஓர் அடையாளத்தைக் கொண்டுள்ளது. இந்த மேம்பாட்டில் துன் டாக்டர் மகாதீரின் பங்களிப்பை அளவிட முடியாது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு

என்ற திருக்குறளுக்கு ஏற்ப மலேசியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருமாற்றும் சிந்தனை மகாதீரின் மனதில்  ஆழமாக வேரூன்றியது. 

    அவரின் உயர்வான எண்ணம் போல மலேசியா உலகளவில் பல புதிய பரிணாமங்களைக் காணத் தொடங்கியது. 

    தனது தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, புத்ரா ஜெயா, பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் போன்ற பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து அதில் மகாதீர் வெற்றிக் காண்டார்.

படம் 2: வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை,
புத்ரா ஜெயா, பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்

  2020-ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றியமைப்பதற்காக 1991-ஆம் ஆண்டு வாவாசான் 2020 தொலைநோக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது மலேசியாவை முற்றிலும் மேம்பட்ட நாடாக மாற்றும் கனவுக்கு துவக்கமாக அமைந்தது.

    மலேசியாவை ஒரு தொழில்துறை நாடாக மாற்ற வேண்டும் என்றால் முதலில் ஒரு தேசிய வாகனத்தை உருவாக்க வேண்டும் என்பது துன் மகாதீரின் லட்சியக் கனவாகும்.

   நாட்டின் முதல் தேசிய காரான புரோட்டானை உருவாக்கியது துன் மகாதீரின் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். 1985 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புரோட்டான் சாகா வெறும் காராக மட்டுமல்லாமல் ஒரு தேசிய சின்னமாகவும் மாறியது.


படம் 3: நாட்டின் முதல் கார்

    பொருளாதாரத்திலும், அவர் எடுத்த முடிவுகள் முக்கியமானவை. 1982-ஆம் ஆண்டில் அறிமுகமான கிழக்கு நோக்கிய கொள்கை மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளின் உழைப்பு நெறி, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டது.

    அதுமட்டுமல்லாமல், கடந்த 1997-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியின் போது, பிற நாடுகள் சர்வதேசய நாணய நியத்தின் உதவியை நாடியப் போது, துன் மகாதீர் தனது திறனால்  நாட்டின் பொருளியல் வளர்ச்சியை ஒரே ஆண்டில் மீட்டெடுத்தார். அப்போது சரிவுப் பாதையிலிருந்து மலேசியாவை மீட்டெடுப்பதில் டாக்டர் மகாதீர் முக்கியப் பங்காற்றியிருந்தார்.

    கல்வி துறையில் மாரா, தொழில்நுட்ப கல்வி, Multimedia Super Corridor, சைபர்ஜெயா போன்ற திட்டங்களைக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார்.

    22 ஆண்டுகள் பிரதமர் பதவியிலிருந்த துன் மகாதீர், மீண்டும் 15 ஆண்டுகளுக்குப் பின் 2018-ஆம் ஆண்டு தனது 92 வயதில் மலேசியாவின் 7-ஆவது பிரதமராகப் பதவியேற்ற உலகின் மூத்தப் பிரதமராகத் திகழ்ந்தார்.

    அவரது உலகளாவிய பெருமை, 2019-ஆம் ஆண்டு Fortune Magazine  வெளியிட்ட உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியலில் இடம் பெற்றதில் வெளிப்படுகிறது.


படம் 4: உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியல்

    பதவியிலிருந்து விலகி சென்றாலும் நடப்பு அரசியல் சூழலுக்கு எதிராக குரல் கொடுப்பதைத் துன் மகாதீர் இன்னும் நிறுத்தவில்லை. தனக்கெதிராக பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதற்கு எல்லாம் செவி சாய்க்காமல் துன் மகாதீர் தொடர்ந்து தனது சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்.

  இந்தப் பெருந்தலைவரைப் பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதையெல்லாம் கடந்து நாட்டின் வளர்சியில் அவரது அளப்பரியப் பங்கை அனைவரும் போற்ற வேண்டும்.

100-ஆவது வயதில் துன் மகாதீர் நாட்டின் வரலாற்றில் இடம்பிடித்த நபராக மட்டுமல்லாமல் அவரே வாழும் வரலாறாக திகழ்கின்றார்.

- அஸ்வினி செந்தாமரை

Sunday, 16 June 2024

ஜெய்ன் ராயான் கொலை வழக்கின் குற்றமும் பின்னணியும்

    நாட்டையே உலுக்கி வரும் ஆட்டிசம் (Autism) குறைப்பாடுள்ள ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ராயானின் கொலை வழக்கு பலரது நெஞ்சைப் பதற செய்தது.  இந்த அப்பாவி சிறுவனின் மரணத்தின் பின்னணி என்ன? ஈவிரக்கமில்லாமல் சிறுவனைக் கொலை செய்த அந்தப்  பாதகர்கள் யார்?


    கடந்தாண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஆட்டிசம் (autism) குறைப்பாடுள்ள சிறுவன் ஜெய்ன் ராயான் தனது வீட்டிற்கு அருகிலுள்ள விளையாட்டு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.

    சிறுவன் காணாமல் போனதைக் காவல்துறையில் புகார் செய்வதற்கு முன்பு அவரின் பெற்றோர் இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். சிறுவனை அடுத்த குடியிருப்புப் பகுதிக்குச் செல்வதைப் பெற்றோர்கள் இறுதியாக அவரைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

    மறுநாள் டிசம்பர் 6-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறையும்  குடியிருப்பு குடியிருப்போர் சங்கமும் இரவு 8 மணிக்குத் தொடங்கி குடியிருப்புத் தொகுதியிலுள்ள நுழைவாயில்களின்  வழிகளைக் கட்டுப்படுத்தி வீடு வீடாகச் சென்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.

    சிறுவன் மீண்டும் கிடைத்து விடுவார் என்ற எண்ணத்தில் தேடுதல் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

    சிரித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த இளம் உயிர் இரவு 10 மணியளவில் அவரது குடியிருப்புப் பகுதியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள ஆற்றின் ஓரம் சடலமாக மீட்கப்பட்டான். 

    டிசம்பர் 7-ஆம் தேதி சுங்கை பூலோ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஜெய்ன் ராயானின் மரணம் ஓர் இயற்கை மரணமல்ல. மாறாக, சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான் என்று சிலாங்கூர் மாவட்டக் காவல்துறை உறுதிப்படுத்தியது. 

    குழந்தையின் கழுத்திலும் உடலிலும் காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனையின் முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

    சிறுவனைக் கொன்ற கொலையாளியைக் கண்டறியும் முயற்சியில் முழு வீச்சில் காவல்துறை இறங்கியது. 

    டிசம்பர் 8-ஆம் தேதி சிறுவனின் குடியிருப்பு பகுதியைச் சுற்றியுள்ள குற்றச் செயல்கள் கொண்ட நபர்களைக் காவல்துறை சோதனை செய்தனர். குழந்தையின் உடலில் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் பழைய காயங்களின் தடயங்கள் எதுவும் இல்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 10-ஆம் தேதி 2,484 வீடு, வணிக வளாகங்களை ஆய்வு செய்வதை உள்ளடக்கிய விசாரணையில் உதவ மொத்தம் 228 பேர் டிஎன்ஏ (DNA) சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    டிசம்பர் 13-ஆம் தேதி மலேசியத் தீயணைப்பு மீட்புத் துறை சிலாங்கூர் நீர் மற்றும் வடிகால் துறை ஆகியவை சிற்றோடையில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்தனர். மேலும், ஜெய்ன் ராயானின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள ஆற்றின் நீர் தேக்கத்தில் ஒரு காலுறையைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

    மறுநாள், டிசம்பர் 15-ஆம் தேதி அந்நீரில் கண்டெடுக்கப்பட்ட காலுறைகள் ஜெய்ன் ரய்யானுடையது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

    டிசம்பர் 23-ஆம் தேதி ஜெய்ன் ரய்யான் வழக்கில் ஆதாரங்களைத் தேடும் பணியில் சர்வதேச காவல்துறையான இன்டர்போல் உதவியைக் மலேசிய காவல்துறையினர் கோரினர்.

    இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட கொலையளிகளைக் கண்டறிய காவல்துறையினர் பல நடவடிக்கைகளைக் கையாண்டனர். 

    இந்நிலையில், இந்தாண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி சிலாங்கூர் குற்றத் தடுப்பு அறக்கட்டளையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஏ.தெய்வீகன் சந்தேக நபர்களைக் கைது செய்ய உதவும் நபர்களுக்கு 20,000 வெள்ளி வெகுமதியாக வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார்.

    வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தும் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை ஜெய்ன் ரய்யான் வழக்கு தொடர்பான தகவல்களை வழங்க எந்தத் தரப்பும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

    அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், மே மாதம் 8-ஆம் தேதி புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) இயக்குநர் முஹம்மத் சுஹைலி முஹம்மத் ஜெய்ன் தனது தரப்பு கொலையாளியைத் தேடுவதில் புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்தார். 

    யாரும் எதிர்ப்பார்க்காத நிலை, மே 31-ஆம் தேதி காவல்துறையினரின் விசாரணைக்கு உதவுவதற்காக ஜெய்ன் ராயானின் பெற்றோர் ஜைம் இக்வான் ஜாஹாரி, இஸ்மானிரா அப்துல் மானாஃப் ஆகியோரைப் புன்சாக் அலாமில் கைது செய்யப்பட்டனர். 


    ஜூன் 1-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் 29- வயதான சிறுவனின் பெற்றோர் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-கீழ் ஏழு நாட்களுக்கு காவலில் வைக்க அனுமதித்தது. ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் இருந்த சிறுவனின் பெற்றோரின் தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்க ஜூன் 7-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    சிறுவனின் பெற்றோர் ஜூன் 13-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.   

    ஜூன் 10-ஆம் தேதி ஜெய்ன் ராயானின் தாயை அவர்களின் குடியிருப்புப் பகுதிக்குக் காவல்துறையினர் அழைத்து வந்தனர். ஜெய்ன் ரய்யானின் உடல் கண்டுபிடிக்கப்படும் வரை அவர் காணாமல் போன சூழ்நிலையை மீண்டும் உருவாக்கி கொலையாளியைக் கண்டறிய முயற்சி செய்தனர். 

    ஜூன் 12-ஆம் தேதி வழக்கின் விசாரணை தொடர்பாகச் சிறுவனின் தாய் பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், அதே நாள் மதியம் 2.30 மணியளவில் விசாரணைக்கு உதவ ஜெய்ன் ராயானின் தாத்தா பாட்டியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

    வழக்கு பல கோணங்களில் சென்ற நிலையில் இறுதியில் சிறுவனின் பெற்றோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    சிறுவனுக்குக் காயம் ஏற்படும் வரை பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி ஜூன் 13-ஆம் தேதி, பெற்றோர் பெற்றோர் ஜைம் இக்வான் ஜாஹாரி, இஸ்மானிரா அப்துல் மானாஃப் மீது பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ நீதிமன்றத்தின் குற்றம் சாட்டப்பட்டனர். 

    இருப்பினும், இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து இப்போது விசாரணை கோரி உள்ளனர். குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1) (a), பிரிவு 34 ஆகிய இரு பிரிவின் கீழ் அவர்கள் இருவர் மீதும்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது  

    குற்றம் நிரூப்பிக்கப்பட்டால்  20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, 50,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இந்த வழக்குகான  ஜூலை 26-ஆம் மறு செவிமடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அந்தப் பச்சிளம் சிறுவனைுத் துடிக்க துடிக்க சாகடித்தவர்கள் யார்? அவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்களா? நீதிமன்றம் அவர்களைத் தண்டிக்குமா? இது தான் இன்று மலேசியர் ஒவ்வொருவரின் எண்ண ஓட்டமாக உள்ளது.





Monday, 20 February 2023

உலகத் தாய்மொழி தினம்


    உலகில் நடைபெறும் அனைத்துவகைப் பரிமாற்றங்களும் ஏதோ ஒரு வகையில் தாய்மொழியைச் சார்ந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு மனிதனோடு இயல்பாகப் பிறக்கும் மொழியானது சமுதாயத்தோடு சார்ந்து வளரும் சீர்மையும் கட்டுப்பாடும் மிகுந்த தொடர்புச் சாதனமாகும். இவை இரண்டும் ஒன்று மற்றொன்றினைச் சார்ந்தே வளர்கின்றன, அதனால்தான், மொழி என்பது சமுதாயப் புலப்பாட்டுச் சாதனம் என்பர் மொழியியலாளர்கள். உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்தின் அடைவு நிலை, பண்பாட்டு, நாகரீகம் ஆகியவற்றைப் புலப்படுத்தும் சாதனமாகத் திகழும் தாய்மொழியைக் காப்பாதற்கு ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் தேதி உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகத் தாய்மொழி தினத்தை ஒவ்வொரு ஆண்டும் சமூக ஊடகங்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டு அதனைப் பகிர்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்நாள் அனுசரிக்கப்படுவதற்கான பின்னனி என்ன என்பதை தெரிந்து கொள்ள நினைத்ததன் விளைவே இப்பதிவு. 

உலகத் தாய்மொழி தினத்தின் பின்னனி

 பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவான ஒருங்கிணைந்த இந்தியா, 1947-ஆம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. மத அடிப்படையில் பிரிந்த பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என இரண்டு தனி நிலப்பரப்புகளைக் கொண்டு பிர்ந்தது. இதில் மேற்கு பாகிஸ்தானில் வாழும் மக்கள் தொகையும் நிலப்பரப்பும் கிழக்கு பாகிஸ்தானைக் காட்டிலும் பெரியது. மேற்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையினர் உருது மொழியினைத் தாய்மொழியாகவும் உருது மொழியினைப் பேசுபவர்களாகவே இருந்தனர். அதே சமயத்தில் கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழி மட்டுமே பேசப்பட்டு வந்தது.

இதனிடையே, இரண்டு பிரிவாக இருக்கும் பாகிஸ்தானின் தலைநகரம், நிர்வாகம் ஆகியவை மேற்கு பாகிஸ்தானில் இருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களின் மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற அதிகார வர்கத்தின் செயல் அன்றே இருந்தது. அதன் அடிப்படையில் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநரான முகமது அலி ஜின்னா உருது மொழியை பாகிஸ்தானின் ஆட்சிமொழியாகவும் தேசிய மொழியாகவும் பிரகடனப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தேர்வுகள் அனைத்தும் உருது மொழியில் நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனை ஏற்றுக் கொள்ளாத கிழக்கு பாகிஸ்தானில் வாழும் வங்காளிகள் தங்கள் மொழிக்கும் உரிமை வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நாட்டிற்கு சுதந்திரமடைந்து 4 மாதங்களே ஆன நிலையில் டாக்காவில் மொழியின் உரிமையைக் காப்பதற்காகத் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. போராட்டாங்கள் தீவிரமடைந்த நிலையில் 1948-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி கராச்சியிலிருந்து பாகிஸ்தானின் தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா டாக்கா வந்தடைந்தார். உருது மட்டும்தான் இஸ்லாமியர்களின் தேசிய மொழி என்பதில் உறுதியாக இருந்த ஆளுநர் டாக்கா பல்கலைகழகத்தில் உரை நிகழ்த்தும் போது உருது மொழிக்கு எதிராகப் போராட்டம் செய்பவர்கள் தேசத் துரோகிகளாகக் கருதப்படுவதாகவும் உருது மட்டுமே பாகிஸ்தானின் தேசிய மொழி என்பதில் மத்திய அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார். முகமது அலி ஜின்னாவின் வார்த்தைகள் டாக்கா பல்கலைகழக மாணவர்களை மட்டுமல்லாமல் அரசியல் ஆர்வாளர்களையும் கோபத்திற்கு ஆளாக்கியது. மாணவர்களும் அரசியல் ஆர்வாளர்களும் வங்காள மொழியையும் உருது மொழியைப் போல் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரி சாலை வீதிகளில் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.

மேலும், இவர்களின் போராட்டாங்களைக் கண்டு கொள்ளாத மத்திய அரசு அவற்றை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியது. இதோடு நிறுத்திக் கொள்ளாமல், 1952-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் வங்காள மொழியை உருது, அரேபிய எழுத்துகளைப் பயன்படுத்தி எழுத அனுமதிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வங்காள மக்களை மேலும் கொதிப்படைய செய்தது. இவை அனைத்திற்கும் அப்போது பாகிஸ்தானின் பிரதமராக இருந்த கவாஜா நசிமுத்தினும் ஒரு காரணமாக இருந்தார். அவர் கிழக்குப் பாகிஸ்தானில் பிறந்தவர். அவர் டாக்கா நவாப் குடியைச் சார்ந்தவராக இருப்பினும் அவரின் தாய்மொழி உருது என்பதால் அவரும் உருது மொழி தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

தங்களின் கோரிக்கையை ஏற்க முன் வராத பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்களும் அரசியல் கட்சியினரும் ஒன்றினைந்து 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியைப் போராட்டத் தேதியாக அறிவித்தது. இதனால் அச்சமுற்ற மத்திய அரசு தாய்மொழியைக் காக்கப் போராடுபவர்களைக் கைது செய்ய தொடங்கியது மட்டுமல்லாமல் 144 தடை உத்தரவையும் பிரப்பித்தது. இவை அனைத்திற்கும் அஞ்சாத மாணவர்களும் அரசியல் கட்சியினரும் தாங்கள் திட்டமிட்டப்படி பிப்ரவரி-21 -ஆம் தேதி டாக்கா பல்கலைகழகம் மருத்துவக் கல்லூரி வளாகங்களில் ஒன்று கூடிப் போராட்டங்களை நடத்த துவங்கினர். போராட்டங்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாகிஸ்தான் காவல்துறை எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன.

பாகிஸ்தான் அரசின் உத்தரவுக்குப் பின்னர் காவல்துறையினர் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. இதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாகப் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுப்படத் தொடங்கினர். தொடர் போராட்டத்தால் பாகிஸ்தானின் வருமானம் பாதிப்புக்குள்ளானது. கிழக்குப் பாகிஸ்தானில் பெரும்பான்மையான வருமானத்தால் மத்திய அரசு செயல்பட்டு வந்திருந்தது. அதனால் அப்போது இராணுவ ஆட்சி நடத்தியப் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் 1956-ஆம் ஆண்டு வங்காள மக்களுடன் உடன்பாட்டுக்கு வந்தார். உடன்பாட்டிற்கு பின்னர் வங்காள மொழியும் பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த அறிவிப்பானது செயல்பாட்டில் இல்லாமல் வெறும் அறிவிப்பாகவே இருந்தது. மத்திய அரசாங்க வேலைகளில், பதவிகளில் வங்காளி மக்களுக்கு எதிரான புறகணிப்புத் தொடர்ந்து கொண்டிருந்தது. மாநில அரசு பணிகளிலும் மேற்கு பாகிஸ்தான் மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. மொழியால் ஏற்பட்ட போராட்டம் 1971-ஆம் ஆண்டு கிழக்கு-மேற்கு பாகிஸ்தானுக்கிடையே போராக உருமாறியது. அந்நிய நாட்டுப் பிரச்சனை என்று பார்க்காமல் இந்தியாவின் மேற்கு வங்கத்தின் வங்காளிகள் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்காகப் போராடினர். அதனால் அம்மாநில முதல்வர் சித்தார்த்த ஷங்கர் ரேய் மத்திய அரசு பாகிஸ்தான் மீது படையெடுக்காவிட்டால் மாநில காவல் துறையைச் சண்டைக்கு அனுப்பப் போவதாக எச்சரிக்கை வெளியிட்டார். பிறகு அதன் மீது இந்திய அரசு பாகிஸ்தான் மீது படையெடுத்து வென்றது. இதன் விளைவே வங்காளதேசம் நாடு உருவாகக் காரணமாக இருந்தது.

தங்கள் மொழி புறகணிக்கப்படுவதால் ஏற்பட்ட போராட்டம் இறுதியில் தனி நாடு உருவாக வழியமைத்தது. இந்நிலையில் உலகில் பல மொழிகள் அழிந்து வருவதைத் தடுக்கவும் தாய்மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் சபை 1999-ஆம் ஆண்டு அதற்கான நாளை முடிவு செய்ய வாதங்களை நடத்தி வந்தது. வங்காள தேசம் தாய்மொழிக்காக நடந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த தங்கள் மாணவர்களையும் மக்களையும் பற்றி எடுத்துக் கூறி பிப்ரவரி 21-ஆம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக அறிவிக்க வலியுறுத்தியது. இதனை யுனேஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ஏற்றுக் கொண்டு தாய்மொழியைக் காக்கப் போராடிய வங்காளிகள் கொல்லப்பட்ட பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன் பின் 2000-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பிப்ரவரி 21-ஆம் தேதி உலகத் தாய்மொழி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

     ஆக, நூறு ஆண்டுகளுக்கு முன் உலகத்தில் 7000 மொழிகள் இருந்த நிலையில் அதன் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 3000-க்கும் குறைவான மொழிகளே உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் வார்த்தை வடிவம் பெறாமல் பேச்சு மொழியாக மட்டுமே உள்ளன. நூற்றுக்கணக்கான வளமான மொழிகள் கூட இன்னமும் கல்வி மொழியாக அறிவிக்கப்படாமல் உள்ள சூழலும் நிலவி வருகின்றன. ஆகவே, தாய்மொழி என்பது ஒரு மனிதனின் சிந்திக்கும் ஆற்றலுக்கு அடித்தளமாக இருக்கின்றது. பிற மொழிகள் எல்லாம் அந்த அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டடங்களாகும். அடித்தளம் சரியாக இருக்காத சூழலில் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள் நிலைத்து நிற்காது. ஆகவே, தாய்மொழியின் அவசியத்தை அறிந்து அவற்றை அழியால் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். 


Friday, 2 October 2020

 கொஞ்சம் காப்பி கொஞ்சம் வரலாறு

    அக்டோபர் 1-ஆம் திகதி சர்வதேச காப்பி தினமாக உலக மக்கள் கொண்டாடுகின்றனர். உலகில் பல பானங்கள் இருந்தாலும் காப்பியின் நறுமணத்திற்கும் சுவைக்கும் தனி பிரியர்கள் உள்ளனர். காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காப்பி பருகாவிடில் அந்நாள் முழுமையடைவில்லை என்று எண்ணும் காப்பி பிரியர்கள் உலகில் அதிகம். மனிதனுக்கும் காப்பியின் மீது தனி பிரியம் என்றால் யாராலும் மறுக்க இயலாது. காப்பியைச் சுவைத்து பருகும் நம்மில் எத்தனை பேருக்குக் காப்பியின் வரலாற்றைப் பற்றி தெரியும்? 

    காப்பி அல்லது குளம்பி என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும். காப்பியை முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது அரேபியர்களே. காப்பி என்னும் சொல் ஆங்கிலச் சொல்லாகிய Coffee காஃவி அல்லது கா’வி என்பதன் தமிழ் வடிவம். காப்பியின் அரபு மொழிப் பெயர் கஹ்வா (qahwa (قهوة)) என்பதாகும். கஹ்வா என்றால் விதையில் இருந்து உருவாக்கப்பட்டப் பானம் என்று பொருள்படும். கஹ்வியா என்ற வினை சொல் மூலமாக மறுவிய வார்த்தை. கஹ்வியா என்றால் பசியைப் போக்குவது என்று அர்த்தம். கஹ்வியா காலப் போக்கில் காப்பியாக மறுவியுள்ளது.

   பரவலாகக் கூறப்படும் கதையின் படி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையரான கால்டி என்பவர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார். ஆடுகள் காப்பிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு கால்டியும் அவ்வாறே உண்டு காப்பியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். பிறகு, கால்டி அந்தக் காப்பியின் விதைகளைச் சூஃபி துறவியிடம் கொடுத்து உண்ண சொன்னார். துறவி அதனை உண்ட பின், துறவி நறுமணமானது பழத்தில் அல்ல மாறாக அதன் விதையிலிருந்து தான்  வருவதாகக் கண்டறிந்தார். காப்பி விதைகளை அரைத்துப் பானமாக்கிய நீரே உலகில் தோன்றிய முதல் காப்பி வகையாகும். 


    1607-ஆம் ஆண்டு ஜோன் ஸ்மித் ஆய்வு பயணம் மேற்கொண்ட போதுதான் காப்பியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். 1690- ஆம் ஆண்டு காப்பிச் செடிகள் வணீக ரீதியாக முதன் முதலில் டச்சுக்காரர்களால் ஏற்றுமதி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றனர்.  1713- ஆம் ஆண்டில் தான் பிரஞ்சு மன்னர் லூய்ஸ் IV-க்குக் காப்பி செடிப் பரிசாக வழங்கப்பட்டது. அவரின் ஆட்சியில் தான் முதன் முதலில் காப்பியில் சர்க்கரை கலந்து அருந்தப்பட்டதாகக் கூறுகின்றனர். prototype espresso machine என்ற காப்பி விதைகளை அரைக்கும் இயந்திரத்தை முதலில் 1822-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1938-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் ஏற்பட்ட காப்பி உற்பத்தி பிரச்சனையைச் சரி செய்யும் பொருட்டு அந்நாட்டின் அரசாங்கத்துடன் கைகோர்த்து instant காப்பி தூளை உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே உற்பத்தி செய்தது.
    எத்தியோப்பியாவில் தோன்றிய காப்பி 17- ஆம் நூற்றாண்டில் பல நாடுகளில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் துவங்கியது. அக்காலக்கட்டத்தில் தான் காப்பி இந்தியாவில் கால்பதித்தது என் வரலாற்று சுவடுகள் கூறுகின்றன. 17-ஆம் நூற்றாண்டில் கர்நாடகா மாநிலத்தில் சிம்மா கள்ளூர் பாபா பூடான் என்ற சூஃபி துறவு ஹஜ் யாத்திரைக்காக மக்கா பயணம் செய்திருந்தார். தனி ஹஜ் யாத்திரை முடிந்து யெமன் நாட்டு வழியாக இந்தியாவிற்கு திரும்பி வரும் போது ஏதொ ஒரு விதையை அரைத்து நீரில் கலந்து பானமாகப் பருகுவதைக் கவனித்தார். அக்காப்பியைக் குடித்த அவருக்குப் புத்துணர்வு ஏற்பட்டிருப்பது போல் அவர் உணர்ந்தார். இந்தியாவிற்கு அக்காப்பி விதைகளைக் கொண்டு வந்து பயிரிட நினைத்தார். ஆனால் அதற்கு அரேபியர்கள் மறுப்புத் தெரிவித்தனர். பாபா பூடான் யாருக்கும் தெரியாமல் வறுக்கப்படாத சில காப்பி விதைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து சிம்ம கள்ளூரில் பயிரிட்டார். அன்று அவர் விதைத்த விதை இன்று இந்தியாவில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ் நாட்டில் போன்ற மாநிலங்களில் காப்பி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
    இன்று உலகளவில் 80 நாடுகளில் காப்பி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் மட்டும் உலகளவில் 150 மில்லியன் டன் மூட்டை காப்பி தூள்கள் தயாரிக்கப்படுகின்றன. 1 மூட்டை சுமார் 60kg எடை கொண்டதாகும். 60% காப்பி தூள்கள் பிரேசில், வியட்நாம், கோலோம்பியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆண்டுக்கு 3 லட்சம் டன் காப்பி தூள் உற்பத்தி செய்து உலகளவில் 5-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 
    காப்பியில் அரபிகா மற்றும் ரோபுஸ்தா என இரு வகைகள் உள்ளன. அதில் அரபிகா அதிக சுவை கொண்டது என பலர் கூறுகின்றனர். உலக வரலாற்றில் 16-ஆம் நூற்றாண்டில் மக்காவிலும், 1675-ஆம் ஆண்டு யூரோப்பாவிலும் மற்றும் 1677-ஆம் ஆண்டும் ஜெர்மனியிலும் காப்பி தடை செய்யப்பட்டுள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் தான் இத்தடைகள் நீக்கப்பட்டன. உலகில் காப்பி பிரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அமெரிக்கர்கள்தா. ஆண்டுக்குச் சுமார் 40 பில்லியன் டாலர் காப்பி அருந்த மட்டும் செலவிடுவதாகக் கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் ஆண்டிற்கு 1.6 பில்லியன் டாலர் காப்பி அருந்த மட்டும் மக்கள் செலவிடுகின்றனர்.
    இடையன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டக் காப்பி இன்று உலகை ஆளுகின்றது. உலகில் பல விதமான காப்பிகள் இருந்தாலும் நம் இல்லத்தில் மணக்க மணக்க தயாரிக்கப்படும் பில்டர் காப்பிக்கு ஈடாகுமா? இந்தப் பதிவைப் படித்துச் சற்றுக் களைத்திற்களாக? காப்பியை நோக்கி சமையல் அறைக்குச் செல்லுங்கள்...


Wednesday, 16 September 2020

இந்தியாவின் அரசியலமைப்பின் தந்தைஅம்பேத்கரின் சாகாவரிகள்

இந்தியாவின் அரசியலமைப்பின் தந்தைஅம்பேத்கரின் சாகாவரிகள்


  • மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்திச் செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம்
  • வெற்றியோ தோல்வியா எதுவரினும் கடமையைச் செய்வோம்
  • யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்
  • தன்னை உயர்ந்தவனாகவும் மற்றோரைத் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி
  • எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிசத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்
  • அறிவு, நன்னடத்தை, சுய மரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள். இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை
  • வறுமை என்பது உடன் பிறந்தது. தவிர்க்க முடியாதது. தீர்க்க முடியாதது என்றெண்ணுவது உங்களின் மடமை
  • அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழித்தோண்டிப் புதையுங்கள்.
  • ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்
  • எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன்
  • உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து. முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது
  • மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய இயலும்
  • ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது. 
  • அறிவைத் தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலைத் தேடி ஓடிவரும்.

Friday, 4 September 2020

அழிவு சக்தியால் உருவான நோபல் விருது

அழிவு சக்தியால் உருவான நோபல் விருது


    ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையில் உலக நலனுக்காகவும் மனிதக் குலத்தின் மேம்பாட்டிற்கும் தங்களை அர்ப்பணிக்கும் அர்ப்பணிப்பாளர்களின் கீர்த்தியை இந்த அகிலம் அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் விருதுகள் வெவ்வேறு வகையில் வழங்கப்படுகின்றன. ஆனால் ஒட்டுமொத்த ஞாலத்திற்கு ஓர் உயரிய விருது நோபல் விருது என்றால் ஒருவராலும் மறுக்க இயலாது. ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்க்கும் பெரும் நன்மை பயக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் போற்றப்படும் பரிசு நோபலுக்கே உரியது.

     நோபல் விருது தேசம், சாதி, மதம், நிறம் பேதம் பார்க்காமல் தனி மனிதனின் சேவையையும் தியாகத்தையும் கௌரவிக்க வழங்கப்படுகிறது. உலகில் ஒவ்வொரு ஆண்டு இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி என ஆறு துறைகளில் மனிதக் குலத்தின் வளர்ச்சிக்காகச் சிறந்த படைப்பை வழங்குபவர்களுக்குத் தான் நோபல் விருது வழங்கப்படுகின்றது.  நோபல் விருதுக்கு இணையான ஒரு விருது இவ்வுலகில் இன்றளவும் மலரவில்லை. நோபல் விருது கடந்த 100 ஆண்டுகள் நிலையாக நிலைத்து வருகின்றது. 

         ஆக்க வழிகளில் ஒவ்வொரு தனி மனிதனையும் சிந்திக்கத் தூண்டும் நோபல் விருதின் தோற்றத்திற்கு அழிவு சக்தி தான் காரணம் என்றால் உங்களால் நம்ப இயலுமா ? அழிவு சக்தியை உருப்பெற செய்து அதனால் ஏற்பட்ட அழிவைக் கண்டு மனம் சஞ்சலம் அடைந்த ஒரு விஞ்ஞானி தன் இறப்பிற்கு பின் ஏற்படப் போகும் அவப்பெயரைத் துடைத்தெறிய உருவாகியதுதான் நோபல் விருது. அந்த அழிவு சக்தி டைனமைட் ( Dynamite ) என்கிற வெடிகுண்டு ஆகும்.
    
    கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும் (1801-1872), கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும் (1805-1889), நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் 21-ஆம் திகதி 10-வது மாதம் 1833-ஆம் ஆண்டில் பிறந்தார். ஆல்பிரட் நோபலின் தந்தை மிகச் சிறந்த பொறியாளர் ஆவார். அவர் கட்டடங்கள், பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளில் கற்களை வெடிக்க வைத்து அதனை உடைப்பதில் நோபலின் தந்தை புகழ் பெற்றவர். 
    
     ஆல்பிரட் நோபல் பிறப்பிற்கு பின் தந்தையின் நிறுவனம் பெருமளவு வீழ்ச்சியைச் சந்தித்தது. அதன் பிறகு, இம்மானுவேல் நோபல் ரஷ்யா செல்ல ஆயுத்தமானார். தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றார். தனது பிள்ளைகள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்குத் தனியார் கல்வி கற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார் இம்மானுவேல். வளமான அவரது பெற்றோர்கள், தனியார் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு நோபலை அனுப்ப முடிந்தது. அதனால் அவர் வேதியியல் பாடம் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். ஆல்பிரட் நோபல் தனது 17-ஆவது வயதிலே சுவிடிஷ், ரஷ்சியன், பிரஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாகப் பேசும் ஆற்றலையும் எழுதும் ஆற்றலையும் கொண்டிருந்தார். 
    
    ஆல்பிரட் நோபலை உலகில் தலை சிறந்த வேதியியல் பொறியியலாளராக உருவாக்க வேண்டும் என்பதே தந்தையின் கனவு. அதனால் 1850 ஆம் ஆண்டில் ஆல்பிரட் நோபலை மேற்படிப்பிற்கு பாரிஸ் அனுப்பி வைத்தார். பாரிஸில் ஆல்பிரட் நோபலோடு படித்த அச்கானியோவால் சொப்ரீரோவா என்ற இத்தாலியர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தழைமவீருயிரகக் களிக்கரை அதாவது ஆங்கிலத்தில் நைட்ரோகிளிசரின் என்ற இரசாயனத்தைக் கண்டு பிடித்தார். வெடிக்கும் ஆற்றலைக் கொண்ட நைட்ரோகிளிசரின்னால்  பெரும் சேதம் நிகழக் கூடும் என்பதை உணர்ந்த அவர் அந்த ஆராய்ச்சியை அவர் கைவிட்டார். ஆனால் கைவிடப்பட்ட ஆராய்ச்சியை ஆல்பிரட் நோபல் கண்டறிய விரும்பினார். பாரிஸில் தன் படிப்பை முடித்தப் பின், ரஷ்யா திரும்பிய ஆல்பிரட் தன் தந்தையோடு இணைந்து எவ்வாறு நைட்ரோகிளிசரினைக் கட்டுமானத் துறையில் பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

    குடும்பத்தின் தொழிற்சாலை க்ரிமியன் போர்க்காக (1853-1856) ஆயுத உற்பத்தியை செய்து வந்தது. ஆனால், க்ரிமியன் போர் முடிந்ததும், உள்நாட்டு உற்பத்திற்கு மீண்டும் மாறுவதற்கு கடினமாக இருந்த நிலையில் அவர்கள் திவாலாகும் நிலை இருந்தது. தொழிலில் ஏற்பட்ட இழப்பால் நோபல் மற்றும் அவரது பெற்றோர்கள் ரஷ்யாவில் இருந்து சுவீடன் திரும்பினார்கள். ஆல்பிரட் நோபல் வெடிப்பொருட்களின் ஆய்வில் தன்னை அர்ப்பணித்தார். சுவீடன் திரும்பியப் பின், நைட்ரோகிளிசரினை வைத்து வெடி மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டார் ஆல்பிரட் . அஃது அபாயம் எனத் தெரிந்தும் அதனை நன்மை பயக்கும் வழியில் பயன்படுத்தினால் நல் காரியங்களுக்குப் பெரிது பயன்படும் என்ற சிந்தனையால் ஆராய்ச்சியில் முனைப்புக் காட்டினார். 

    பல முறை செய்த சோதனைகளில் யாவும் தோல்வியையே சந்தித்தார். பரிசோதனையின் போது வெடிப்புகள் ஏற்பட்டு ஆல்பிரடின் தொழிற்சாலைகள் நாசமாகின. 3-ஆம் செப்டம்பர் 1864 அன்று, ஸ்டாக்ஹோமில் ஹெலேன்போர்க்கில் ஒரு தொழிற்சாலையில் நைட்ரோகிளிசரினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கொட்டகையில் வெடி விபத்து ஏற்பட்டதால், நோபலின் இளைய சகோதரர் எமில் உட்பட ஐந்து பேர் மரணம் அடைந்தனர். ஆல்பிரடின் கண்டுபிடிப்பிற்கு சுவீடன் அரசு தடை விதித்தது. ஆனால், நோபல் சிறிய விபத்துக்களைச் சந்தித்தாலும் கலக்கம் இல்லாமல் தலைமறைவாக, அவர் உருவாக்கிய வெடிபொருட்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த மேலும் தொழிற்சாலைகளை நிறுவினார்.  

    உதிரி களிமண்களோடு நைட்ரோகிளிசரின் சேர்த்துப் பிசைந்தால் பாதுகாப்பான வெடி மருந்து கிட்டும் என்பதை கண்டுபிடித்தார் ஆல்பிரட் . முள் குத்தியதால் நடக்க மறுக்கலாமோ ?   தோல்வியுற்றால் துவண்டு போகலாமோ? புறந்தள்ளிப் பயணிப்போம் வெற்றிகளை அடைவோம் என்ற வரிகளில் கூறியது போல், ஆல்பிரட் நோபல் நிலையற்ற நைட்ரோகிளிசிரினைவிட கையாள எளிதாக மற்றும் பாதுகாப்பான பொருளாகிய டைனமைட்டைக் கண்டுபிடித்தார். கிரேக் மொழியில் டைனமைட் என்றால் சக்தி எனப் பொருள்படும். 
                                                
                                     
                                               
    அவரின் இந்தக் கண்டுபிடிப்பு உலகளவில் அமோக வரவேற்பைப் பெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 90 டைனமைட் தொழிற்சாலைகளை ஆல்பிரட் நிறுவினார் ; பெருமளவில் செல்வத்தையும் ஈட்டினார். செல்வம் ஒரு புறம் சேர்ந்தாலும் ஆக்கச் சக்தியாக உருவாகிய டைனமைட்டை ஒரு சிலர் அழிவு சக்தியாகச் செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். 1888 ஆம் ஆண்டில், அவரது சகோதரர் லுட்விக் மரணத்தை தொடர்ந்து பல செய்தித்தாள்கள் ஆல்பிரட் நோபல் தான் மரணமுற்றார் என்ற தவறான கூற்றை வெளியிட்டன. ஒரு பிரஞ்சு நாளிதழில் "Le Marchand De La mort est Mort" அதாவது மரணத்தின் வியாபாரி மரணித்தார் என்ற செய்தியை வெளியிட்டது.  அதனைப் படித்த ஆல்பிரட்டுக்கு மனதில் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. தன்னுடைய உண்மையான மரணத்திற்கு பின் உலகம் இவ்வாறு தான் தன்னைப் பழிக்கப் போகிறது என்ற அச்சம் அவருள் ஏற்பட்டது.

    அந்த அவப்பெயர் அவருக்குக் கிட்டக் கூடாது என்றும் அந்தக் கலங்கத்தைத் துடைக்க ஒரு வழியைச் சிந்தித்தார் ஆல்பிரட் . நோபல் சகோதரர்கள் லுட்விக் மற்றும் ராபர்ட் காஸ்பியன் கடலோரம் உள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி அவர்களது சொந்த உரிமையில் மிகவும் பணக்காரராக மாறினர். நோபலும் இதில் முதலீடு செய்து புதிய எண்ணெய் பகுதிகளின் வளர்ச்சி மூலம் பெரும் செல்வத்தை குவித்தார். தான் ஈன்ற செல்வம் அனைத்தையும் உலக நலனுக்காகவும் மனீடக் குலத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பாடுப்படுபவர்களுக்குப் பரிசாக வழங்க எண்ணினார். அவர் நிறுவிய 90-க்கும் மேற்பட்டத் தொழிற்சாலைகளிலிருந்தும் ரஷ்யா எண்ணெய் கிணறுகளில் இருந்து கிட்டும் முதலீடுகளிலிருந்தும் கிட்டியப் பணத்தைக் கொண்டு நோபல் அறக்கட்டளையை நிறுவினார். 

    1890-ஆம் ஆண்டு தன்னுடைய உயிலில் தனக்குச் சொந்தமான 9 மில்லியன் டாலர் பணத்தை தன்னுடைய அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தைக் கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு துறைகளில் மிகச் சிறந்த சேவையாற்றியவர்களுக்குப் பரிசுகள் தர எண்ணினார். 1896- ஆம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் டிசம்பர் மாதம் 10-ஆம் திகதி இத்தாலியில் இயற்கை ஏய்தினார். தன்னை உலகம் அழிவுச் சகிதியைக் கண்டுபிடித்த நோபல் என்று தூற்றக் கூடாது என்று எண்ணினார். 

    அவரின் மரணத்திற்கு பின், 1901-ஆம் ஆண்டு முதன் முதலில் நோபல் பரிசு வழங்கத் தொடங்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி என 5 துறைகளில் ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்க்கும் பெரும் நன்மை பயக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் நோபல் விருது வழங்கப்பட்டது. 1969- ஆம் ஆண்டு ஆறாவது துறையாகப் பொருளாதாரத்தையும் இணைத்தனர். இந்த நோபல் விருது வழங்கும் விழா ஆல்பிரட் நோபல் மறைந்த தினமான டிசம்பர் 10-ஆம் திகதியில் ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெற்று வருகின்றது. இவ்விழா ஆல்பிரட் பிறந்த நாடான சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்மில் நகரத்தில் நடைப்பெறுகின்றது. அமைதிக்கான நோபல் விருது மட்டும் நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் நடைப்பெறுகின்றன. 

    1901-2019 ஆம் ஆண்டு வரை 919 பேரும் 24 அமைப்புகளும் நோபல் விருதுகளைப் பெற்றுள்ளனர். இரண்டாம் உலகப் போர் ஏற்பட்ட 3 ஆண்டுகளில் நோபல் விருது விழா அரங்கேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வெற்றியாளர்களும், தங்கப் பதக்கம், நற்சான்றிதழ் மற்றும் 8459404 அமெரிக்க டாலரும் பரிசாக வழங்கப்படுகின்றது. இதுவரை 10 இந்தியர்கள் நோபல் பரிசினை பெற்றுள்ளனர். அதில் 3 பேர் தமிழர்கள் என்று நினைக்கும் தருணம் நம்மை மெய்சிலிரிக்க வைக்கின்றது. 1930-இல் சர்.சிவி ராமன், 1983-இல் சுப்ரமணியன் சந்திரசேகர் மற்றும் 2009-இல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் நோபல் விருது பெற்ற தமிழர்கள் ஆவர். 

    தன்னை அழிவு சக்தி உருவாக்கியத் தீயவன் என்று தூற்றாமல் உலகின் நலனுக்காகவும் மனிதக் குலத்தின் மேன்மைக்காகவும் உழைக்கும் அறிவாளிகளைக் கௌரவிக்கும் நோபல் ஒரு சிறந்த மனிதர் என்று அகிலம் நினைக்க வேண்டும் என்று எண்ணிய அவரின் ஆசை நிறைவேறியது. ஒவ்வொரு ஆண்டு நோபல் விருது வழங்கப்படும் தருவாயில் இன்றளவும் அவரின் புகழை இந்த மண் பாடுகிறது. அவரின் நோக்கமும் சிந்தனையும் போற்றத்தக்கது.

Monday, 31 August 2020

புரியாதப் புதிராய் இருக்கும் சிதம்பர இரகசியம்

 புரியாதப் புதிராய் இருக்கும் சிதம்பர இரகசியம்

சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் என்ற தலத்தின் பெயரைக் கேட்டால் நம் நினைவிற்கு வருவது சிதம்பர இரகசியம் தான். அது என்ன சிதம்பர இரகசியம்? இன்றளவும் அது தேடல் நிறைந்துள்ளதாகவே இருந்தது. தேடலில் கிட்டிய சில விடயங்களைக் காண்போம்.



படம் 1 : சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

தமிழ் நாட்டின் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்னும் இடத்தில்தான் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. சிதம்பரம் தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய நகரமாகும். இக்காலத்தில் இவ்விடத்தைச் சிதம்பரம் என்று அழைக்கப்பட்டாலும் ஆதி காலத்தில் தில்லை என்ற பெயராலே இவ்விடம் அறியப்பட்டுள்ளது. தில்லை மரங்கள் அதிகம் இருந்த ஒரு வனப்பகுதியாக இவ்விடம் இருந்ததால் ஆதியில் தில்லை என்று அழைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் என்ற சொல்லை

சித் + அம்பரம் : சிதம்பரம்

என்று பிரித்துப் பார்க்கலாம். சித் என்றால் அறிவையும் அம்பரம் என்றால் ஆகாயத்தையும் குறிக்கின்றன. இந்த ஆலயத்தில் அருவமாய் ஆகாயமாக நடராஜர் இருப்பதால் இந்தத் தலம் சிதம்பர நடராஜர் என்ற பெயரைக் கொண்டிருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றனர். தலத்தின் பெயரை அந்நகரத்தின் பெயராகப் பிற்காலத்தில் மறுவியுள்ளது. நால்வர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் தேவாரத்தில் போற்றி பாடிய தலமாகவும் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் திகழ்கின்றது.

  தில்லைவனம் என்று அழைக்கப்பட்ட தில்லை இன்று சிதம்பரம் என அழைக்கப்படுகின்றது. கி.பி 1300-இல் மாலிக் கபூர் என்ற மன்னரின் படையெடுப்புக்குப் பின் சிதம்பரம் சார்ந்த ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டன. அக்காலத்தில் ஓர் அரசன் படையெடுக்கும் நாடுகளில் அவனது மதமே ஆதிக்கம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் இருந்துள்ளது. இவ்வாறு பல வரலாறுகளை இழந்த தில்லை நாயக்கர்களால் மீட்கப்பட்டு தில்லையின் அறிவியல், மருத்துவ ஏடுகளை இரகசியமாகக் காக்கப்பட்டுள்ளன.

          இந்து சமய வேதங்களின்படி தை மாதம் குரு பூசம் பகல் நேரம், சிவப் பெருமான் தன்னுடைய 3000 பூதகணங்களோடு பூமிக்கு வந்து பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆனந்த தாண்டவமாய் காட்சியளிப்பதற்காகத் தில்லையைத் தெரிவு செய்தார். இந்த ஆலயம் கட்டி முடித்தப் பின் 3000 பூதகணங்களில் ஒருவர் காணவில்லை என்றும் தொலைந்த போன அந்த ஒருவர்தான் நடராஜர் என்று புராணங்கள் கூறுகின்றனர்.

3000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆலயமாகத் திகழ்ந்தாலும் தொல்லியல் ஆய்வில் கிடைத்த சான்றுகள் மற்றும் தடயங்களை வைத்துப் பார்க்கும்போது இத்தலம் கி.பி 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சைவ சமயத்தில் இத்தலம் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக எழுதப்பட்டுள்ளது. நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களைக் காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சபை, முதலாம் பராந்தகன் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனகசபை எனக் கூறப்படுகிறது.

சிதம்பர ஆலயத்தில் மட்டுமே சிவனை மூன்று உருவமாக வணங்குகின்றனர். விக்ரக வழிபாடு நடராஜனுக்கும் லிங்க வழிபாடு சந்திரமௌலிஸ்வரருக்கும் ஆகாய வழிபாடு ஆகாயத்திற்கும் செய்கின்றனர். இந்த ஆகாய வழிபாடு சிதம்பர இரகசியங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது. ஆலயத்தின் சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டுத் தீபாராதனை காட்டப்படும். அங்குத் திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கும். இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது, அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.

சிதம்பர ஆலயத்தில் அறிவியல், பொறியியல், கணிதவியல் போன்ற மறுபக்க இரகசியமும் உள்ளதை ஆய்வாளர்கள் நிருப்பித்துள்ளனர். தமிழன் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல் இரகசியங்களைச் சிதம்பர ஆலயத்தில் திணித்துள்ளான் என்பதைப் பார்க்கும் போது நம்மை ஒரு கணம் வியப்பில் ஆழ்த்துகின்றது. 

  •   புவியியல்

-     சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் பூமியின் பூமத்தியரேகையின் சரியான மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதனை ஆங்கிலத்தில் Centre Point of World’s Magnetic Equator என்று அழைக்கின்றனர். இந்துக்களின் சாஸ்திரங்களின் இவ்வுலகம் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றப் பஞ்சப் பூதங்களால் ஆனது. நிலத்துக்கு ஆதாரமாக நீரும், நீருக்கு ஆதாரமாக நெருப்பும், நெருப்புக்கு ஆதாரமாகக் காற்றும் காற்றுக்கு ஆதாரமாக ஆகாயமும் அமைந்துள்ளன. பஞ்ச பூதங்களைக் குறிக்கும் ஆலயங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் கால அஸ்தி ஆலயம், மற்றும் நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ஆகிய மூன்றும் புவியியல் நிலையில் ஒரே நேர்க் கோட்டில் அதாவது 79 degree 49 min கிழக்குத் தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன் எந்தவொரு மின்சார கருவிகளும் செயற்கை கோள்களும் இல்லாதக் காலக்கட்டத்தில் தமிழர்கள் எவ்வாறு துளியமாக இந்த மூன்று தலங்களையும் ஒரே நேர் கோட்டில் கட்டியிருப்பார்கள்? சிந்தியுங்கள்…


படம் 2 : ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கும் ஆலயங்கள்

    அதுமட்டுமல்லாமல் சிதம்பர நடராஜர் ஆலயம் காந்த சக்தியின் மையப் பகுதியாகவும் திகழ்கின்றது. மேலும் சிதம்பர கோவிலின் மேல் பறக்கும் செயற்கைகோள்கள் செயல் இழந்து விடுகின்றன என்றும் கூறப்படுகின்றது. ஆலயத்தின் கோபுரங்களில் உள்ள கலசங்கள் ஒரு விதமான சக்தியை வெளியேற்றுகின்றன. இந்தச் சக்திகள் தான் செயற்கை கோளைச் செயலிழக்கக் காரணமாக இருக்கின்றது. Magnetic lines இந்த உலகில் சுழிய்ம் என்ற நிலநேர்க்கோட்டில் இருக்கின்ற ஒரே இடம் சிதம்பரம் ஆகும். ஆலயம் வீற்றிருக்கும் இடம் காந்த கதிர் வீச்சுகளின் மையமாக விளங்குகின்றது. கோஸ்மஸ் எனப்படும் பிராணத் துகள்களால் இவ்வுலகம் இயங்குகின்றது. உலகம் சுழலுவதற்கான சக்தியை கோஸ்மிக் ரேய்ஸ் கொடுக்கின்றது. கோஸ்மிக் ரேய்ஸ் வந்து செல்லும் பகுதியாக சிதம்பரம் அமைந்துள்ளது.


படம் 3: கோஸ்மிக் ரேய்ஸ் வந்து செல்லும் வழியை நடராஜரின் சிலையின் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

  •  *  உலகம் எவ்வாறு தோன்றியது.

-      நடராஜர் சிலை சமயத்தின் குறியீடாக மட்டுமல்லாமல் அறிவியல் வெளிப்பாடாகவும் திகழ்கின்றது. அகிலம் எவ்வாறு உருவானது என்பதை துள்ளியமாகக் கூறும் ஒரு குறியீடாக உள்ளது. இந்த 21-ஆம் நூற்றாண்டின் மெய் சிலிர்க்க வைக்கும் விஞ்ஞான துறைக்குச் சவால் விடும் அளவிற்கு தனக்குள் பல அறிவியல் நுணுக்கங்களை இச்சிலை அடக்கி வைத்துள்ளது. 1972-இல் Fritjof Capra என்ற விஞ்ஞானி எழுதிய Tao Of Physics என்ற நூலில் the cosmic dance of Shiva வை பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

-      உலகத்தில் மிகச் சிறந்த அணு ஆராய்ச்சி நிறுவனமான European Organization for Nuclear Research ( CERN ) சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா என்ற இடத்தில் 27 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அனைத்து ஆராய்ச்சிகளும் செய்யப்படும் தலமாக ( CERN ) திகழ்கின்றது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் நுழைவாயிலில் 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால் கடந்த 2004-ஆம் ஆண்டு) சுவிட்சர்லாந்து நாட்டிற்கு 2 நடராஜர் சிலைகள் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஒன்று நுழைவாயிலிலும் மற்றொன்று ஆராய்ச்சி கூடத்திலும் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம்?

படம் 4 :  ( CERN ) ஆராய்ச்சி மையத்தின் நுழைவாயில்

அந்தச் சிலைக்கு கீழ் பகுதியில் காலத்தால் சொல்ல இயலாத பல கேள்விகளுக்கு பதில்களை இச்சிலை அடக்கியுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது.

               அதுமட்டுமல்லாமல் இந்தச் சிலையின் அமைப்பு அகிலத்தின் அமைப்பை வெளிபடுத்துகின்றது.

படம் 5 : நடராஜர் சிலை அமைப்பு

நடராஜரைச் சுற்றி இருக்கும் வளைவு இந்த அகிலத்தையும் அதில் பதிக்கப்பட்டுள்ள நெருப்பு இந்த உலகம் விரிவடைந்து கொண்டே இருக்கும் என்பதை காட்டுகிறது. இதற்கு இடையில் அமைந்துள்ள நடராஜர் சிலையின் வடிவம் வலது கையிலிருந்து இடது கால் வரை பால் வழிகளின் வடிவத்தை இவரின் தலையிலிருந்து கால் வரை கோஸ்மிக் ரேய்ஸ் பால் வழிகளைக் கடந்து போகும் திசையையும் வெளிக்காட்டுகின்றது. நடராஜரின் இதயம் அமைந்துள்ள இடம் தான் நாம் வாழும் சூரியக் குடும்பமும் அமைந்துள்ளது. நடராஜரின் இடுப்பைச் சுற்றி நகரும் பாம்பு காலம் என்றும் நிற்காமல் ஓடும் என்பதைக் காட்டுகின்றது. இந்தப் பிரபஞ்சத்தின் அமைப்பையே மேற்கத்திய விஞ்ஞானிகள் Big Bang Theory என்ற ஆய்வு கட்டுரையின் மூலம் கூறுகின்றனர்.

  • மனிதனின் உடல் அமைப்பு.

-      மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.

-              சிதம்பரம் நடராஜர் கோவிலில் 9 நுழைவாயில்கள் உள்ளன. அதுபோல் மனித உடலில் 9 துளைகள் உள்ளன. நடராஜரின் சன்னதி மனிதனின் இதயத்தை வெளிப்படுகின்றது. உடலில் இடப் பக்கம் இதயம் அமைந்துள்ளது போல் கோவிலின் கருவறையின் இடது புறத்தில் நடராஜர் சிலை அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் முதலாம் பராந்தகன் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டுள்ளது. இக்கூரையில் 21600 தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. 21600 தங்க ஓடுகள் சராசரி ஒரு மனிதன் ஒரு நாளில் சுவாசிக்கும் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன் 15 முறை சுவாசிக்கின்றான். அப்படியென்றால் ஒரு மணி நேரத்தில் 900 முறையும் 24 மணி நேரத்தில் 21600 முறையும் சுவாசிக்கின்றான் மனிதன். அந்தத் தங்க ஓடுகளைப் பதிக்க 65000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 65000 ஆணிகள் மனித உடலில் இருக்கும் நாடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன.

-       மனித உடல் வடிவத்தில் ஏன் இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது? அனைத்தின் ஆதி காரணம் ஆகாயம் ஆகும். மனித உடலிலும் ஆகாயம் உள்ளது. இதனையே அம்பரம் என்று சமஸ்கிருதத்தில் சொல்லப்படுகின்றது. இதய ஆகாயம் என்று சொல்கின்றனர். அங்கு தான் மூச்சாய் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். கோபத்தின் போது மூச்சுக் காற்று வேகமாக வெளியேறும். அப்பொழுது நடராஜர் ருத்ர தாண்டவம் ஆடுவார் என்றும் சொல்வர். அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் இருக்கும் என்பதே சிதம்பர இரகசியம்.

 படம் 6 : நடராஜர் சிலையில் உள்ள அர்த்தங்கள்

ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புற மேல் கையில் உடுக்கையைக் கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதைத் தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதைக் குறிப்பதைப் போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது. இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது.

           அதுமட்டுமல்லாமல், நடராஜர் சிலையில் மற்றொரு அம்சமும் அடங்கியுள்ளது. ஒரு காதில் கடுக்கன் அணியப்பட்டும் மற்றொரு காதில் கம்மல் இருக்கும். சிவப்பெருமனை நாம் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைப்போம். ஆண் பாதி பெண் பாதி என்பதே அதற்குப் பொருள் . ஒரு பக்கம் ஆண்கள் அணியும் கடுக்கண் மறுபக்கம் பெண்கள் அணியும் கம்மல் நடராஜர் சிலையில் புலப்படுகின்றது. நடராஜரைச் சுற்றி ஓர் ஆடை பரந்து இருப்பது போல் இருக்கும். அந்த ஆடை பெண்ணைக் குறிக்கின்றது.  ஒரு பகுதியான மார்பு பகுதியையும் ஒரு கை மறைப்பது போல் இருக்கும். இதன் மூலம் தமிழன் நாகரீகத்தின் உச்சத்தைத் தொட்டவன் என்பது புலப்படுகின்றது.

         இதுவரை நீங்கள் படித்தவை யாவும் சிதம்பர நடராஜர் ஆலயத்தின் சில இரகசியங்களே ஆகும். இன்னும் அவிழ்க்கப்படாத பல உண்மைகள் இந்த ஆலயத்தில் இருக்கின்றன. சிதம்பர நடராஜர் ஆலயம் சிவ தலம் மட்டுமல்ல அது பழமை வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி கூடமாக இருந்து அகிலத்தின் தோற்றத்தைக் கூறி உலகத்திற்கும் தனிப்பட்ட மனித உடலுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கி அறிவியலின் எல்லை ஆன்மிகம் என்பதை நிருப்பித்துள்ளது.


 

நூறாவது அகவையில் தடம் பதிக்கின்றார் மலேசியாவைச் செதுக்கிய சிற்பி

படம் 1: பிறந்த நாள் வாழ்த்து      2025-ஆம் ஆண்டு 10-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் 100 வயதை எட்டிய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை நா...