கொஞ்சம் காப்பி கொஞ்சம் வரலாறு
அக்டோபர் 1-ஆம் திகதி சர்வதேச காப்பி தினமாக உலக மக்கள் கொண்டாடுகின்றனர். உலகில் பல பானங்கள் இருந்தாலும் காப்பியின் நறுமணத்திற்கும் சுவைக்கும் தனி பிரியர்கள் உள்ளனர். காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காப்பி பருகாவிடில் அந்நாள் முழுமையடைவில்லை என்று எண்ணும் காப்பி பிரியர்கள் உலகில் அதிகம். மனிதனுக்கும் காப்பியின் மீது தனி பிரியம் என்றால் யாராலும் மறுக்க இயலாது. காப்பியைச் சுவைத்து பருகும் நம்மில் எத்தனை பேருக்குக் காப்பியின் வரலாற்றைப் பற்றி தெரியும்?
காப்பி அல்லது குளம்பி என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும். காப்பியை முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது அரேபியர்களே. காப்பி என்னும் சொல் ஆங்கிலச் சொல்லாகிய Coffee காஃவி அல்லது கா’வி என்பதன் தமிழ் வடிவம். காப்பியின் அரபு மொழிப் பெயர் கஹ்வா (qahwa (قهوة)) என்பதாகும். கஹ்வா என்றால் விதையில் இருந்து உருவாக்கப்பட்டப் பானம் என்று பொருள்படும். கஹ்வியா என்ற வினை சொல் மூலமாக மறுவிய வார்த்தை. கஹ்வியா என்றால் பசியைப் போக்குவது என்று அர்த்தம். கஹ்வியா காலப் போக்கில் காப்பியாக மறுவியுள்ளது.
பரவலாகக் கூறப்படும் கதையின் படி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையரான கால்டி என்பவர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார். ஆடுகள் காப்பிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு கால்டியும் அவ்வாறே உண்டு காப்பியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். பிறகு, கால்டி அந்தக் காப்பியின் விதைகளைச் சூஃபி துறவியிடம் கொடுத்து உண்ண சொன்னார். துறவி அதனை உண்ட பின், துறவி நறுமணமானது பழத்தில் அல்ல மாறாக அதன் விதையிலிருந்து தான் வருவதாகக் கண்டறிந்தார். காப்பி விதைகளை அரைத்துப் பானமாக்கிய நீரே உலகில் தோன்றிய முதல் காப்பி வகையாகும்.

1607-ஆம் ஆண்டு ஜோன் ஸ்மித் ஆய்வு பயணம் மேற்கொண்ட போதுதான் காப்பியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். 1690- ஆம் ஆண்டு காப்பிச் செடிகள் வணீக ரீதியாக முதன் முதலில் டச்சுக்காரர்களால் ஏற்றுமதி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றனர். 1713- ஆம் ஆண்டில் தான் பிரஞ்சு மன்னர் லூய்ஸ் IV-க்குக் காப்பி செடிப் பரிசாக வழங்கப்பட்டது. அவரின் ஆட்சியில் தான் முதன் முதலில் காப்பியில் சர்க்கரை கலந்து அருந்தப்பட்டதாகக் கூறுகின்றனர். prototype espresso machine என்ற காப்பி விதைகளை அரைக்கும் இயந்திரத்தை முதலில் 1822-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1938-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் ஏற்பட்ட காப்பி உற்பத்தி பிரச்சனையைச் சரி செய்யும் பொருட்டு அந்நாட்டின் அரசாங்கத்துடன் கைகோர்த்து instant காப்பி தூளை உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே உற்பத்தி செய்தது.
எத்தியோப்பியாவில் தோன்றிய காப்பி 17- ஆம் நூற்றாண்டில் பல நாடுகளில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் துவங்கியது. அக்காலக்கட்டத்தில் தான் காப்பி இந்தியாவில் கால்பதித்தது என் வரலாற்று சுவடுகள் கூறுகின்றன. 17-ஆம் நூற்றாண்டில் கர்நாடகா மாநிலத்தில் சிம்மா கள்ளூர் பாபா பூடான் என்ற சூஃபி துறவு ஹஜ் யாத்திரைக்காக மக்கா பயணம் செய்திருந்தார். தனி ஹஜ் யாத்திரை முடிந்து யெமன் நாட்டு வழியாக இந்தியாவிற்கு திரும்பி வரும் போது ஏதொ ஒரு விதையை அரைத்து நீரில் கலந்து பானமாகப் பருகுவதைக் கவனித்தார். அக்காப்பியைக் குடித்த அவருக்குப் புத்துணர்வு ஏற்பட்டிருப்பது போல் அவர் உணர்ந்தார். இந்தியாவிற்கு அக்காப்பி விதைகளைக் கொண்டு வந்து பயிரிட நினைத்தார். ஆனால் அதற்கு அரேபியர்கள் மறுப்புத் தெரிவித்தனர். பாபா பூடான் யாருக்கும் தெரியாமல் வறுக்கப்படாத சில காப்பி விதைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து சிம்ம கள்ளூரில் பயிரிட்டார். அன்று அவர் விதைத்த விதை இன்று இந்தியாவில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ் நாட்டில் போன்ற மாநிலங்களில் காப்பி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இன்று உலகளவில் 80 நாடுகளில் காப்பி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் மட்டும் உலகளவில் 150 மில்லியன் டன் மூட்டை காப்பி தூள்கள் தயாரிக்கப்படுகின்றன. 1 மூட்டை சுமார் 60kg எடை கொண்டதாகும். 60% காப்பி தூள்கள் பிரேசில், வியட்நாம், கோலோம்பியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆண்டுக்கு 3 லட்சம் டன் காப்பி தூள் உற்பத்தி செய்து உலகளவில் 5-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
காப்பியில் அரபிகா மற்றும் ரோபுஸ்தா என இரு வகைகள் உள்ளன. அதில் அரபிகா அதிக சுவை கொண்டது என பலர் கூறுகின்றனர். உலக வரலாற்றில் 16-ஆம் நூற்றாண்டில் மக்காவிலும், 1675-ஆம் ஆண்டு யூரோப்பாவிலும் மற்றும் 1677-ஆம் ஆண்டும் ஜெர்மனியிலும் காப்பி தடை செய்யப்பட்டுள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் தான் இத்தடைகள் நீக்கப்பட்டன. உலகில் காப்பி பிரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அமெரிக்கர்கள்தா. ஆண்டுக்குச் சுமார் 40 பில்லியன் டாலர் காப்பி அருந்த மட்டும் செலவிடுவதாகக் கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் ஆண்டிற்கு 1.6 பில்லியன் டாலர் காப்பி அருந்த மட்டும் மக்கள் செலவிடுகின்றனர்.
இடையன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டக் காப்பி இன்று உலகை ஆளுகின்றது. உலகில் பல விதமான காப்பிகள் இருந்தாலும் நம் இல்லத்தில் மணக்க மணக்க தயாரிக்கப்படும் பில்டர் காப்பிக்கு ஈடாகுமா? இந்தப் பதிவைப் படித்துச் சற்றுக் களைத்திற்களாக? காப்பியை நோக்கி சமையல் அறைக்குச் செல்லுங்கள்...