உலகில் நடைபெறும் அனைத்துவகைப்
பரிமாற்றங்களும் ஏதோ ஒரு வகையில் தாய்மொழியைச் சார்ந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு மனிதனோடு இயல்பாகப் பிறக்கும் மொழியானது சமுதாயத்தோடு சார்ந்து வளரும் சீர்மையும்
கட்டுப்பாடும் மிகுந்த தொடர்புச் சாதனமாகும். இவை இரண்டும் ஒன்று மற்றொன்றினைச் சார்ந்தே
வளர்கின்றன, அதனால்தான், மொழி என்பது சமுதாயப் புலப்பாட்டுச் சாதனம் என்பர் மொழியியலாளர்கள்.
உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்தின் அடைவு நிலை, பண்பாட்டு, நாகரீகம் ஆகியவற்றைப் புலப்படுத்தும்
சாதனமாகத் திகழும் தாய்மொழியைக் காப்பாதற்கு ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் தேதி உலகத் தாய்மொழி
தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகத் தாய்மொழி தினத்தை ஒவ்வொரு ஆண்டும் சமூக ஊடகங்களின்
வாயிலாகத் தெரிந்து கொண்டு அதனைப் பகிர்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்நாள் அனுசரிக்கப்படுவதற்கான
பின்னனி என்ன என்பதை தெரிந்து கொள்ள நினைத்ததன் விளைவே இப்பதிவு.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவான ஒருங்கிணைந்த
இந்தியா, 1947-ஆம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான்
பிரிவினை நிகழ்ந்தது. மத அடிப்படையில் பிரிந்த பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மேற்கு
பாகிஸ்தான் என இரண்டு தனி நிலப்பரப்புகளைக் கொண்டு பிர்ந்தது. இதில் மேற்கு பாகிஸ்தானில்
வாழும் மக்கள் தொகையும் நிலப்பரப்பும் கிழக்கு பாகிஸ்தானைக் காட்டிலும் பெரியது. மேற்கு
பாகிஸ்தானில் பெரும்பான்மையினர் உருது மொழியினைத் தாய்மொழியாகவும் உருது மொழியினைப்
பேசுபவர்களாகவே இருந்தனர். அதே சமயத்தில் கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழி மட்டுமே
பேசப்பட்டு வந்தது.
இதனிடையே,
இரண்டு பிரிவாக இருக்கும் பாகிஸ்தானின் தலைநகரம், நிர்வாகம் ஆகியவை மேற்கு பாகிஸ்தானில்
இருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களின் மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற
அதிகார வர்கத்தின் செயல் அன்றே இருந்தது. அதன் அடிப்படையில் பாகிஸ்தானின் முதல் தலைமை
ஆளுநரான முகமது அலி ஜின்னா உருது மொழியை பாகிஸ்தானின் ஆட்சிமொழியாகவும் தேசிய மொழியாகவும்
பிரகடனப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின்
தேர்வுகள் அனைத்தும் உருது மொழியில் நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனை ஏற்றுக் கொள்ளாத கிழக்கு பாகிஸ்தானில் வாழும் வங்காளிகள் தங்கள் மொழிக்கும் உரிமை
வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாட்டிற்கு
சுதந்திரமடைந்து 4 மாதங்களே ஆன நிலையில் டாக்காவில் மொழியின் உரிமையைக் காப்பதற்காகத்
தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. போராட்டாங்கள் தீவிரமடைந்த நிலையில் 1948-ஆம்
ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி கராச்சியிலிருந்து பாகிஸ்தானின் தலைமை ஆளுநர் முகமது அலி
ஜின்னா டாக்கா வந்தடைந்தார். உருது மட்டும்தான் இஸ்லாமியர்களின் தேசிய மொழி என்பதில்
உறுதியாக இருந்த ஆளுநர் டாக்கா பல்கலைகழகத்தில் உரை நிகழ்த்தும் போது உருது மொழிக்கு
எதிராகப் போராட்டம் செய்பவர்கள் தேசத் துரோகிகளாகக் கருதப்படுவதாகவும் உருது மட்டுமே
பாகிஸ்தானின் தேசிய மொழி என்பதில் மத்திய அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
முகமது அலி ஜின்னாவின் வார்த்தைகள் டாக்கா பல்கலைகழக மாணவர்களை மட்டுமல்லாமல் அரசியல்
ஆர்வாளர்களையும் கோபத்திற்கு ஆளாக்கியது. மாணவர்களும் அரசியல் ஆர்வாளர்களும் வங்காள
மொழியையும் உருது மொழியைப் போல் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரி சாலை
வீதிகளில் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.
மேலும்,
இவர்களின் போராட்டாங்களைக் கண்டு கொள்ளாத மத்திய அரசு அவற்றை ஒடுக்கும் முயற்சியில்
இறங்கியது. இதோடு நிறுத்திக் கொள்ளாமல், 1952-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் வங்காள மொழியை
உருது, அரேபிய எழுத்துகளைப் பயன்படுத்தி எழுத அனுமதிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த
அறிவிப்பு வங்காள மக்களை மேலும் கொதிப்படைய செய்தது. இவை அனைத்திற்கும் அப்போது பாகிஸ்தானின்
பிரதமராக இருந்த கவாஜா நசிமுத்தினும் ஒரு காரணமாக இருந்தார். அவர் கிழக்குப் பாகிஸ்தானில்
பிறந்தவர். அவர் டாக்கா நவாப் குடியைச் சார்ந்தவராக இருப்பினும் அவரின் தாய்மொழி உருது
என்பதால் அவரும் உருது மொழி தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக
இருந்தார்.
தங்களின்
கோரிக்கையை ஏற்க முன் வராத பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்களும் அரசியல்
கட்சியினரும் ஒன்றினைந்து 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியைப் போராட்டத் தேதியாக
அறிவித்தது. இதனால் அச்சமுற்ற மத்திய அரசு தாய்மொழியைக் காக்கப் போராடுபவர்களைக் கைது
செய்ய தொடங்கியது மட்டுமல்லாமல் 144 தடை உத்தரவையும் பிரப்பித்தது. இவை அனைத்திற்கும்
அஞ்சாத மாணவர்களும் அரசியல் கட்சியினரும் தாங்கள் திட்டமிட்டப்படி பிப்ரவரி-21 -ஆம்
தேதி டாக்கா பல்கலைகழகம் மருத்துவக் கல்லூரி வளாகங்களில் ஒன்று கூடிப் போராட்டங்களை
நடத்த துவங்கினர். போராட்டங்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாகிஸ்தான்
காவல்துறை எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன.
பாகிஸ்தான்
அரசின் உத்தரவுக்குப் பின்னர் காவல்துறையினர் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின.
இதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு
ஆதரவாகப் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுப்படத் தொடங்கினர். தொடர் போராட்டத்தால் பாகிஸ்தானின்
வருமானம் பாதிப்புக்குள்ளானது. கிழக்குப் பாகிஸ்தானில் பெரும்பான்மையான வருமானத்தால்
மத்திய அரசு செயல்பட்டு வந்திருந்தது. அதனால் அப்போது இராணுவ ஆட்சி நடத்தியப் பாகிஸ்தான்
அதிபர் அயூப் கான் 1956-ஆம் ஆண்டு வங்காள மக்களுடன் உடன்பாட்டுக்கு வந்தார். உடன்பாட்டிற்கு
பின்னர் வங்காள மொழியும் பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால்
அந்த அறிவிப்பானது செயல்பாட்டில் இல்லாமல் வெறும் அறிவிப்பாகவே இருந்தது. மத்திய அரசாங்க
வேலைகளில், பதவிகளில் வங்காளி மக்களுக்கு எதிரான புறகணிப்புத் தொடர்ந்து கொண்டிருந்தது.
மாநில அரசு பணிகளிலும் மேற்கு பாகிஸ்தான் மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. மொழியால்
ஏற்பட்ட போராட்டம் 1971-ஆம் ஆண்டு கிழக்கு-மேற்கு பாகிஸ்தானுக்கிடையே போராக உருமாறியது.
அந்நிய நாட்டுப் பிரச்சனை என்று பார்க்காமல் இந்தியாவின் மேற்கு வங்கத்தின் வங்காளிகள்
கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்காகப் போராடினர். அதனால் அம்மாநில முதல்வர் சித்தார்த்த
ஷங்கர் ரேய் மத்திய அரசு பாகிஸ்தான் மீது படையெடுக்காவிட்டால் மாநில காவல் துறையைச்
சண்டைக்கு அனுப்பப் போவதாக எச்சரிக்கை வெளியிட்டார். பிறகு அதன் மீது இந்திய அரசு பாகிஸ்தான்
மீது படையெடுத்து வென்றது. இதன் விளைவே வங்காளதேசம் நாடு உருவாகக் காரணமாக இருந்தது.
தங்கள்
மொழி புறகணிக்கப்படுவதால் ஏற்பட்ட போராட்டம் இறுதியில் தனி நாடு உருவாக வழியமைத்தது.
இந்நிலையில் உலகில் பல மொழிகள் அழிந்து வருவதைத் தடுக்கவும் தாய்மொழி குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் சபை 1999-ஆம் ஆண்டு அதற்கான நாளை முடிவு செய்ய வாதங்களை
நடத்தி வந்தது. வங்காள தேசம் தாய்மொழிக்காக நடந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த
தங்கள் மாணவர்களையும் மக்களையும் பற்றி எடுத்துக் கூறி பிப்ரவரி 21-ஆம் தேதியை உலகத்
தாய்மொழி தினமாக அறிவிக்க வலியுறுத்தியது. இதனை யுனேஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள்
சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ஏற்றுக் கொண்டு தாய்மொழியைக் காக்கப்
போராடிய வங்காளிகள் கொல்லப்பட்ட பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிக்கப்படும்
என்று அறிவித்தது. அதன் பின் 2000-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பிப்ரவரி
21-ஆம் தேதி உலகத் தாய்மொழி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
ஆக, நூறு ஆண்டுகளுக்கு முன் உலகத்தில்
7000 மொழிகள் இருந்த நிலையில் அதன் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 3000-க்கும்
குறைவான மொழிகளே உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் வார்த்தை வடிவம் பெறாமல் பேச்சு
மொழியாக மட்டுமே உள்ளன. நூற்றுக்கணக்கான வளமான மொழிகள் கூட இன்னமும் கல்வி மொழியாக
அறிவிக்கப்படாமல் உள்ள சூழலும் நிலவி வருகின்றன. ஆகவே, தாய்மொழி என்பது ஒரு மனிதனின்
சிந்திக்கும் ஆற்றலுக்கு அடித்தளமாக இருக்கின்றது. பிற மொழிகள் எல்லாம் அந்த அடித்தளத்தின்
மீது எழுப்பப்பட்ட கட்டடங்களாகும். அடித்தளம் சரியாக இருக்காத சூழலில் கட்டப்பட்டிருக்கும்
கட்டடங்கள் நிலைத்து நிற்காது. ஆகவே, தாய்மொழியின் அவசியத்தை அறிந்து அவற்றை அழியால்
பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.