நாட்டையே உலுக்கி வரும் ஆட்டிசம் (Autism) குறைப்பாடுள்ள ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ராயானின் கொலை வழக்கு பலரது நெஞ்சைப் பதற செய்தது. இந்த அப்பாவி சிறுவனின் மரணத்தின் பின்னணி என்ன? ஈவிரக்கமில்லாமல் சிறுவனைக் கொலை செய்த அந்தப் பாதகர்கள் யார்?
கடந்தாண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஆட்டிசம் (autism) குறைப்பாடுள்ள சிறுவன் ஜெய்ன் ராயான் தனது வீட்டிற்கு அருகிலுள்ள விளையாட்டு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.
சிறுவன் காணாமல் போனதைக் காவல்துறையில் புகார் செய்வதற்கு முன்பு அவரின் பெற்றோர் இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். சிறுவனை அடுத்த குடியிருப்புப் பகுதிக்குச் செல்வதைப் பெற்றோர்கள் இறுதியாக அவரைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
மறுநாள் டிசம்பர் 6-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறையும் குடியிருப்பு குடியிருப்போர் சங்கமும் இரவு 8 மணிக்குத் தொடங்கி குடியிருப்புத் தொகுதியிலுள்ள நுழைவாயில்களின் வழிகளைக் கட்டுப்படுத்தி வீடு வீடாகச் சென்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
சிறுவன் மீண்டும் கிடைத்து விடுவார் என்ற எண்ணத்தில் தேடுதல் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
சிரித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த இளம் உயிர் இரவு 10 மணியளவில் அவரது குடியிருப்புப் பகுதியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள ஆற்றின் ஓரம் சடலமாக மீட்கப்பட்டான்.
டிசம்பர் 7-ஆம் தேதி சுங்கை பூலோ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஜெய்ன் ராயானின் மரணம் ஓர் இயற்கை மரணமல்ல. மாறாக, சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான் என்று சிலாங்கூர் மாவட்டக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
குழந்தையின் கழுத்திலும் உடலிலும் காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனையின் முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.
சிறுவனைக் கொன்ற கொலையாளியைக் கண்டறியும் முயற்சியில் முழு வீச்சில் காவல்துறை இறங்கியது.
டிசம்பர் 8-ஆம் தேதி சிறுவனின் குடியிருப்பு பகுதியைச் சுற்றியுள்ள குற்றச் செயல்கள் கொண்ட நபர்களைக் காவல்துறை சோதனை செய்தனர். குழந்தையின் உடலில் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் பழைய காயங்களின் தடயங்கள் எதுவும் இல்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 10-ஆம் தேதி 2,484 வீடு, வணிக வளாகங்களை ஆய்வு செய்வதை உள்ளடக்கிய விசாரணையில் உதவ மொத்தம் 228 பேர் டிஎன்ஏ (DNA) சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
டிசம்பர் 13-ஆம் தேதி மலேசியத் தீயணைப்பு மீட்புத் துறை சிலாங்கூர் நீர் மற்றும் வடிகால் துறை ஆகியவை சிற்றோடையில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்தனர். மேலும், ஜெய்ன் ராயானின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள ஆற்றின் நீர் தேக்கத்தில் ஒரு காலுறையைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
மறுநாள், டிசம்பர் 15-ஆம் தேதி அந்நீரில் கண்டெடுக்கப்பட்ட காலுறைகள் ஜெய்ன் ரய்யானுடையது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.
டிசம்பர் 23-ஆம் தேதி ஜெய்ன் ரய்யான் வழக்கில் ஆதாரங்களைத் தேடும் பணியில் சர்வதேச காவல்துறையான இன்டர்போல் உதவியைக் மலேசிய காவல்துறையினர் கோரினர்.
இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட கொலையளிகளைக் கண்டறிய காவல்துறையினர் பல நடவடிக்கைகளைக் கையாண்டனர்.
இந்நிலையில், இந்தாண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி சிலாங்கூர் குற்றத் தடுப்பு அறக்கட்டளையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஏ.தெய்வீகன் சந்தேக நபர்களைக் கைது செய்ய உதவும் நபர்களுக்கு 20,000 வெள்ளி வெகுமதியாக வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார்.
வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தும் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை ஜெய்ன் ரய்யான் வழக்கு தொடர்பான தகவல்களை வழங்க எந்தத் தரப்பும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், மே மாதம் 8-ஆம் தேதி புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) இயக்குநர் முஹம்மத் சுஹைலி முஹம்மத் ஜெய்ன் தனது தரப்பு கொலையாளியைத் தேடுவதில் புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
யாரும் எதிர்ப்பார்க்காத நிலை, மே 31-ஆம் தேதி காவல்துறையினரின் விசாரணைக்கு உதவுவதற்காக ஜெய்ன் ராயானின் பெற்றோர் ஜைம் இக்வான் ஜாஹாரி, இஸ்மானிரா அப்துல் மானாஃப் ஆகியோரைப் புன்சாக் அலாமில் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 1-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் 29- வயதான சிறுவனின் பெற்றோர் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-கீழ் ஏழு நாட்களுக்கு காவலில் வைக்க அனுமதித்தது. ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் இருந்த சிறுவனின் பெற்றோரின் தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்க ஜூன் 7-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுவனின் பெற்றோர் ஜூன் 13-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.
ஜூன் 10-ஆம் தேதி ஜெய்ன் ராயானின் தாயை அவர்களின் குடியிருப்புப் பகுதிக்குக் காவல்துறையினர் அழைத்து வந்தனர். ஜெய்ன் ரய்யானின் உடல் கண்டுபிடிக்கப்படும் வரை அவர் காணாமல் போன சூழ்நிலையை மீண்டும் உருவாக்கி கொலையாளியைக் கண்டறிய முயற்சி செய்தனர்.
ஜூன் 12-ஆம் தேதி வழக்கின் விசாரணை தொடர்பாகச் சிறுவனின் தாய் பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், அதே நாள் மதியம் 2.30 மணியளவில் விசாரணைக்கு உதவ ஜெய்ன் ராயானின் தாத்தா பாட்டியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
வழக்கு பல கோணங்களில் சென்ற நிலையில் இறுதியில் சிறுவனின் பெற்றோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சிறுவனுக்குக் காயம் ஏற்படும் வரை பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி ஜூன் 13-ஆம் தேதி, பெற்றோர் பெற்றோர் ஜைம் இக்வான் ஜாஹாரி, இஸ்மானிரா அப்துல் மானாஃப் மீது பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ நீதிமன்றத்தின் குற்றம் சாட்டப்பட்டனர்.
இருப்பினும், இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து இப்போது விசாரணை கோரி உள்ளனர். குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1) (a), பிரிவு 34 ஆகிய இரு பிரிவின் கீழ் அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
குற்றம் நிரூப்பிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, 50,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இந்த வழக்குகான ஜூலை 26-ஆம் மறு செவிமடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பச்சிளம் சிறுவனைுத் துடிக்க துடிக்க சாகடித்தவர்கள் யார்? அவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்களா? நீதிமன்றம் அவர்களைத் தண்டிக்குமா? இது தான் இன்று மலேசியர் ஒவ்வொருவரின் எண்ண ஓட்டமாக உள்ளது.