Friday, 4 September 2020

அழிவு சக்தியால் உருவான நோபல் விருது

அழிவு சக்தியால் உருவான நோபல் விருது


    ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையில் உலக நலனுக்காகவும் மனிதக் குலத்தின் மேம்பாட்டிற்கும் தங்களை அர்ப்பணிக்கும் அர்ப்பணிப்பாளர்களின் கீர்த்தியை இந்த அகிலம் அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் விருதுகள் வெவ்வேறு வகையில் வழங்கப்படுகின்றன. ஆனால் ஒட்டுமொத்த ஞாலத்திற்கு ஓர் உயரிய விருது நோபல் விருது என்றால் ஒருவராலும் மறுக்க இயலாது. ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்க்கும் பெரும் நன்மை பயக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் போற்றப்படும் பரிசு நோபலுக்கே உரியது.

     நோபல் விருது தேசம், சாதி, மதம், நிறம் பேதம் பார்க்காமல் தனி மனிதனின் சேவையையும் தியாகத்தையும் கௌரவிக்க வழங்கப்படுகிறது. உலகில் ஒவ்வொரு ஆண்டு இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி என ஆறு துறைகளில் மனிதக் குலத்தின் வளர்ச்சிக்காகச் சிறந்த படைப்பை வழங்குபவர்களுக்குத் தான் நோபல் விருது வழங்கப்படுகின்றது.  நோபல் விருதுக்கு இணையான ஒரு விருது இவ்வுலகில் இன்றளவும் மலரவில்லை. நோபல் விருது கடந்த 100 ஆண்டுகள் நிலையாக நிலைத்து வருகின்றது. 

         ஆக்க வழிகளில் ஒவ்வொரு தனி மனிதனையும் சிந்திக்கத் தூண்டும் நோபல் விருதின் தோற்றத்திற்கு அழிவு சக்தி தான் காரணம் என்றால் உங்களால் நம்ப இயலுமா ? அழிவு சக்தியை உருப்பெற செய்து அதனால் ஏற்பட்ட அழிவைக் கண்டு மனம் சஞ்சலம் அடைந்த ஒரு விஞ்ஞானி தன் இறப்பிற்கு பின் ஏற்படப் போகும் அவப்பெயரைத் துடைத்தெறிய உருவாகியதுதான் நோபல் விருது. அந்த அழிவு சக்தி டைனமைட் ( Dynamite ) என்கிற வெடிகுண்டு ஆகும்.
    
    கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும் (1801-1872), கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும் (1805-1889), நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் 21-ஆம் திகதி 10-வது மாதம் 1833-ஆம் ஆண்டில் பிறந்தார். ஆல்பிரட் நோபலின் தந்தை மிகச் சிறந்த பொறியாளர் ஆவார். அவர் கட்டடங்கள், பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளில் கற்களை வெடிக்க வைத்து அதனை உடைப்பதில் நோபலின் தந்தை புகழ் பெற்றவர். 
    
     ஆல்பிரட் நோபல் பிறப்பிற்கு பின் தந்தையின் நிறுவனம் பெருமளவு வீழ்ச்சியைச் சந்தித்தது. அதன் பிறகு, இம்மானுவேல் நோபல் ரஷ்யா செல்ல ஆயுத்தமானார். தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றார். தனது பிள்ளைகள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்குத் தனியார் கல்வி கற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார் இம்மானுவேல். வளமான அவரது பெற்றோர்கள், தனியார் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு நோபலை அனுப்ப முடிந்தது. அதனால் அவர் வேதியியல் பாடம் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். ஆல்பிரட் நோபல் தனது 17-ஆவது வயதிலே சுவிடிஷ், ரஷ்சியன், பிரஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாகப் பேசும் ஆற்றலையும் எழுதும் ஆற்றலையும் கொண்டிருந்தார். 
    
    ஆல்பிரட் நோபலை உலகில் தலை சிறந்த வேதியியல் பொறியியலாளராக உருவாக்க வேண்டும் என்பதே தந்தையின் கனவு. அதனால் 1850 ஆம் ஆண்டில் ஆல்பிரட் நோபலை மேற்படிப்பிற்கு பாரிஸ் அனுப்பி வைத்தார். பாரிஸில் ஆல்பிரட் நோபலோடு படித்த அச்கானியோவால் சொப்ரீரோவா என்ற இத்தாலியர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தழைமவீருயிரகக் களிக்கரை அதாவது ஆங்கிலத்தில் நைட்ரோகிளிசரின் என்ற இரசாயனத்தைக் கண்டு பிடித்தார். வெடிக்கும் ஆற்றலைக் கொண்ட நைட்ரோகிளிசரின்னால்  பெரும் சேதம் நிகழக் கூடும் என்பதை உணர்ந்த அவர் அந்த ஆராய்ச்சியை அவர் கைவிட்டார். ஆனால் கைவிடப்பட்ட ஆராய்ச்சியை ஆல்பிரட் நோபல் கண்டறிய விரும்பினார். பாரிஸில் தன் படிப்பை முடித்தப் பின், ரஷ்யா திரும்பிய ஆல்பிரட் தன் தந்தையோடு இணைந்து எவ்வாறு நைட்ரோகிளிசரினைக் கட்டுமானத் துறையில் பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

    குடும்பத்தின் தொழிற்சாலை க்ரிமியன் போர்க்காக (1853-1856) ஆயுத உற்பத்தியை செய்து வந்தது. ஆனால், க்ரிமியன் போர் முடிந்ததும், உள்நாட்டு உற்பத்திற்கு மீண்டும் மாறுவதற்கு கடினமாக இருந்த நிலையில் அவர்கள் திவாலாகும் நிலை இருந்தது. தொழிலில் ஏற்பட்ட இழப்பால் நோபல் மற்றும் அவரது பெற்றோர்கள் ரஷ்யாவில் இருந்து சுவீடன் திரும்பினார்கள். ஆல்பிரட் நோபல் வெடிப்பொருட்களின் ஆய்வில் தன்னை அர்ப்பணித்தார். சுவீடன் திரும்பியப் பின், நைட்ரோகிளிசரினை வைத்து வெடி மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டார் ஆல்பிரட் . அஃது அபாயம் எனத் தெரிந்தும் அதனை நன்மை பயக்கும் வழியில் பயன்படுத்தினால் நல் காரியங்களுக்குப் பெரிது பயன்படும் என்ற சிந்தனையால் ஆராய்ச்சியில் முனைப்புக் காட்டினார். 

    பல முறை செய்த சோதனைகளில் யாவும் தோல்வியையே சந்தித்தார். பரிசோதனையின் போது வெடிப்புகள் ஏற்பட்டு ஆல்பிரடின் தொழிற்சாலைகள் நாசமாகின. 3-ஆம் செப்டம்பர் 1864 அன்று, ஸ்டாக்ஹோமில் ஹெலேன்போர்க்கில் ஒரு தொழிற்சாலையில் நைட்ரோகிளிசரினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கொட்டகையில் வெடி விபத்து ஏற்பட்டதால், நோபலின் இளைய சகோதரர் எமில் உட்பட ஐந்து பேர் மரணம் அடைந்தனர். ஆல்பிரடின் கண்டுபிடிப்பிற்கு சுவீடன் அரசு தடை விதித்தது. ஆனால், நோபல் சிறிய விபத்துக்களைச் சந்தித்தாலும் கலக்கம் இல்லாமல் தலைமறைவாக, அவர் உருவாக்கிய வெடிபொருட்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த மேலும் தொழிற்சாலைகளை நிறுவினார்.  

    உதிரி களிமண்களோடு நைட்ரோகிளிசரின் சேர்த்துப் பிசைந்தால் பாதுகாப்பான வெடி மருந்து கிட்டும் என்பதை கண்டுபிடித்தார் ஆல்பிரட் . முள் குத்தியதால் நடக்க மறுக்கலாமோ ?   தோல்வியுற்றால் துவண்டு போகலாமோ? புறந்தள்ளிப் பயணிப்போம் வெற்றிகளை அடைவோம் என்ற வரிகளில் கூறியது போல், ஆல்பிரட் நோபல் நிலையற்ற நைட்ரோகிளிசிரினைவிட கையாள எளிதாக மற்றும் பாதுகாப்பான பொருளாகிய டைனமைட்டைக் கண்டுபிடித்தார். கிரேக் மொழியில் டைனமைட் என்றால் சக்தி எனப் பொருள்படும். 
                                                
                                     
                                               
    அவரின் இந்தக் கண்டுபிடிப்பு உலகளவில் அமோக வரவேற்பைப் பெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 90 டைனமைட் தொழிற்சாலைகளை ஆல்பிரட் நிறுவினார் ; பெருமளவில் செல்வத்தையும் ஈட்டினார். செல்வம் ஒரு புறம் சேர்ந்தாலும் ஆக்கச் சக்தியாக உருவாகிய டைனமைட்டை ஒரு சிலர் அழிவு சக்தியாகச் செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். 1888 ஆம் ஆண்டில், அவரது சகோதரர் லுட்விக் மரணத்தை தொடர்ந்து பல செய்தித்தாள்கள் ஆல்பிரட் நோபல் தான் மரணமுற்றார் என்ற தவறான கூற்றை வெளியிட்டன. ஒரு பிரஞ்சு நாளிதழில் "Le Marchand De La mort est Mort" அதாவது மரணத்தின் வியாபாரி மரணித்தார் என்ற செய்தியை வெளியிட்டது.  அதனைப் படித்த ஆல்பிரட்டுக்கு மனதில் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. தன்னுடைய உண்மையான மரணத்திற்கு பின் உலகம் இவ்வாறு தான் தன்னைப் பழிக்கப் போகிறது என்ற அச்சம் அவருள் ஏற்பட்டது.

    அந்த அவப்பெயர் அவருக்குக் கிட்டக் கூடாது என்றும் அந்தக் கலங்கத்தைத் துடைக்க ஒரு வழியைச் சிந்தித்தார் ஆல்பிரட் . நோபல் சகோதரர்கள் லுட்விக் மற்றும் ராபர்ட் காஸ்பியன் கடலோரம் உள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி அவர்களது சொந்த உரிமையில் மிகவும் பணக்காரராக மாறினர். நோபலும் இதில் முதலீடு செய்து புதிய எண்ணெய் பகுதிகளின் வளர்ச்சி மூலம் பெரும் செல்வத்தை குவித்தார். தான் ஈன்ற செல்வம் அனைத்தையும் உலக நலனுக்காகவும் மனீடக் குலத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பாடுப்படுபவர்களுக்குப் பரிசாக வழங்க எண்ணினார். அவர் நிறுவிய 90-க்கும் மேற்பட்டத் தொழிற்சாலைகளிலிருந்தும் ரஷ்யா எண்ணெய் கிணறுகளில் இருந்து கிட்டும் முதலீடுகளிலிருந்தும் கிட்டியப் பணத்தைக் கொண்டு நோபல் அறக்கட்டளையை நிறுவினார். 

    1890-ஆம் ஆண்டு தன்னுடைய உயிலில் தனக்குச் சொந்தமான 9 மில்லியன் டாலர் பணத்தை தன்னுடைய அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தைக் கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு துறைகளில் மிகச் சிறந்த சேவையாற்றியவர்களுக்குப் பரிசுகள் தர எண்ணினார். 1896- ஆம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் டிசம்பர் மாதம் 10-ஆம் திகதி இத்தாலியில் இயற்கை ஏய்தினார். தன்னை உலகம் அழிவுச் சகிதியைக் கண்டுபிடித்த நோபல் என்று தூற்றக் கூடாது என்று எண்ணினார். 

    அவரின் மரணத்திற்கு பின், 1901-ஆம் ஆண்டு முதன் முதலில் நோபல் பரிசு வழங்கத் தொடங்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி என 5 துறைகளில் ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்க்கும் பெரும் நன்மை பயக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் நோபல் விருது வழங்கப்பட்டது. 1969- ஆம் ஆண்டு ஆறாவது துறையாகப் பொருளாதாரத்தையும் இணைத்தனர். இந்த நோபல் விருது வழங்கும் விழா ஆல்பிரட் நோபல் மறைந்த தினமான டிசம்பர் 10-ஆம் திகதியில் ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெற்று வருகின்றது. இவ்விழா ஆல்பிரட் பிறந்த நாடான சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்மில் நகரத்தில் நடைப்பெறுகின்றது. அமைதிக்கான நோபல் விருது மட்டும் நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் நடைப்பெறுகின்றன. 

    1901-2019 ஆம் ஆண்டு வரை 919 பேரும் 24 அமைப்புகளும் நோபல் விருதுகளைப் பெற்றுள்ளனர். இரண்டாம் உலகப் போர் ஏற்பட்ட 3 ஆண்டுகளில் நோபல் விருது விழா அரங்கேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வெற்றியாளர்களும், தங்கப் பதக்கம், நற்சான்றிதழ் மற்றும் 8459404 அமெரிக்க டாலரும் பரிசாக வழங்கப்படுகின்றது. இதுவரை 10 இந்தியர்கள் நோபல் பரிசினை பெற்றுள்ளனர். அதில் 3 பேர் தமிழர்கள் என்று நினைக்கும் தருணம் நம்மை மெய்சிலிரிக்க வைக்கின்றது. 1930-இல் சர்.சிவி ராமன், 1983-இல் சுப்ரமணியன் சந்திரசேகர் மற்றும் 2009-இல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் நோபல் விருது பெற்ற தமிழர்கள் ஆவர். 

    தன்னை அழிவு சக்தி உருவாக்கியத் தீயவன் என்று தூற்றாமல் உலகின் நலனுக்காகவும் மனிதக் குலத்தின் மேன்மைக்காகவும் உழைக்கும் அறிவாளிகளைக் கௌரவிக்கும் நோபல் ஒரு சிறந்த மனிதர் என்று அகிலம் நினைக்க வேண்டும் என்று எண்ணிய அவரின் ஆசை நிறைவேறியது. ஒவ்வொரு ஆண்டு நோபல் விருது வழங்கப்படும் தருவாயில் இன்றளவும் அவரின் புகழை இந்த மண் பாடுகிறது. அவரின் நோக்கமும் சிந்தனையும் போற்றத்தக்கது.

4 comments:

நூறாவது அகவையில் தடம் பதிக்கின்றார் மலேசியாவைச் செதுக்கிய சிற்பி

படம் 1: பிறந்த நாள் வாழ்த்து      2025-ஆம் ஆண்டு 10-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் 100 வயதை எட்டிய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை நா...